சென்னை: Happy Birthday Sai Pallavi (பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் பல்லவி) மலர் டீச்சராக கேரளா, தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவியின் 31ஆவது பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த கதாநாயகிகள் கிடைப்பது குறிஞ்சி பூ பூப்பது போன்றது. பல வருடங்களுக்கு ஒருமுறைதான் அப்படி ஒருவர் கிடைப்பார். அந்தவகையில் கிடைத்தவர்தான் சாய் பல்லவி. இயற்கை அழகில் கொஞ்சும் நீலகிரியில் பிறந்ததால் என்னவோ இயற்கையான அழகோடு ஜொலிப்பவர். கோயம்புத்தூரில் படித்த சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர். மருத்துவராக மாற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.
நடனம் கற்றுக்கொண்ட சாய் பல்லவி: மருத்துவத்தின் மீது அவருக்கு எப்படி ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வம் நடனத்தின் மீதும் இருந்தது. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. சினிமா என்ட்ரி: நாம் நினைக்காததை நடத்தி காண்பிப்பதுதானே வாழ்க்கை. அதுபோல்தான் சாய் பல்லவிக்கும் நடந்தது. தாம் தூம் படத்தில் ஒரு சில நொடிகள் தலை காண்பித்தவருக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மனதை திருடிய மலர் டீச்சர்: முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எதார்த்த அழகுதான் பிடிக்கும்: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர். அழகு சாதன விளம்பரங்களுக்கு நோ: சினிமாவுக்குள் நுழைந்து பிரபலமடைந்தவர்கள் எந்த விளம்பரத்திலும் நடித்து வருமான ஈட்டலாம் என்பது அவர்களுக்கு அவர்களே வகுத்து வைத்திருக்கும் விதி. ஆனால் சாய் பல்லவி அந்த விதியை எளிதாக மீறியவர். தங்கை பூஜா அவரது நிறத்தை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொண்டதை உணர்ந்துகொண்ட சாய் பல்லவி, அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களுக்கு நோ சொன்னவர். அதுமட்டுமின்றி அவரவருக்கு அவரின் நிறம் உயர்ந்ததுதான். எனில் ஒரு பெண் தான் வெள்ளையாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை எப்படி வந்தது. அந்த நிற விவகாரம் அவளுக்குள் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிறத்தை வைத்து ஒருவரை அணுகுவது எல்லாம் ரொம்பவே தவறு என்று ஓபனாக பேசுவதற்கு அதுவும் ஒரு ஹீரோயின் பேசுவதற்கு மிகப்பெரிய கட்ஸ் வேண்டும். அந்த கட்ஸ் மேல்தட்டிலிருந்து வந்தவர்களுக்கு இருப்பதைவிட நடுத்தரத்திலிருந்து உயர்ந்த இடத்துக்கு சென்றதால் சாய்பல்லவிக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. நடிப்பில் தனி திறமை: தனது முதல் படமான பிரேமம் படத்திலேயே எவ்வளவு பெரிய நடிகை என்பதை சாய் பல்லவி உணர்த்திவிட்டார். அதன் பிறகு அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வந்தார். ஒரு வெற்றி கொடுத்துவிட்டால் பெரும்பாலானோருக்கு ஒரு அசட்டுத்தன்மை ஒட்டிக்கொள்ளும். ஆனால் சாய் பல்லவி அந்த அசட்டு தன்மையை சட்டை செய்யாதவர். அதனால்தான் அவரால் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெல்ல முடிகிறது. அவரது சிறந்த நடிப்புக்கு எக்கச்சக்க உதாரணங்களை சொல்லலாம். ஆனால் அவர் ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதற்கும், ஒரு இயக்குநர் சொல்வதை எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொள்கிறார் என்பதற்கும் ஒரே உதாரணம் போதும். செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்திருப்பார் சாய் பல்லவி. அதில் ஒரு காட்சியில் சூர்யாவின் சட்டையிலிருந்து வரும் ஒரு வாசனை திரவியத்தை நுகர்ந்து பார்க்கும் காட்சி. அந்தக் காட்சியில் சாய் பல்லவியின் நடிப்பையும், வசனம் பேசும் முறையையும் பார்க்கும்போது அப்படியே இயக்குநர் செல்வராகவனை பிரதிபலித்திருப்பார். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் அவர் எவ்வளவு பெரிய டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று. நடிகை என்றாலே மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அலட்டிக்கொண்டு பேச வேண்டும், நடையில் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் தனது இயற்கையான அழகையும், எதார்த்தமான உடையையும், திறமையான நடிப்பையும், அளவான அதேசமயம் நேர்மையான பேச்சையும், போலி இல்லாத எளிமையையும் தன்னிடம் கொண்டிருப்பதால்தான் மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த சாய்பல்லவி இன்று திரையுலகில் வென்ற எளிமையான அரசியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..
Post a Comment